அரசியல், பொருளாதாரம், அரசு நிர்வாகம் என்று மூன்றுவிதமாகப் பிரித்து மோடியின் அரசின் செயல்பாடுகளைப் பார்த்தால் கடைசி இரண்டை விட அரசியல் விவகாரங்களில் மோடி அரசு இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கமுடியும் என்று தோன்றுகிறது. சமீபத்திய தலித் பிரச்னை, அருணாசல மாநில அரசியல் விவகாரம், உத்தராகண்ட் மாநில அரசியல் விவகாரம் என்று எல்லாவற்றிலும் அரசுக்கு கெட்டப்பெயரே கிடைத்திருக்கிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமன விவகாரத்திலும் சரியாக சமாளிக்காமல் சிக்கலை எதிர்கொள்கிறார்கள். இதுபோன்ற விசயங்களில் ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் அரசை விமர்சிக் கிறார்கள்.
ஹரியானா, குஜராத், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் பசுபாதுகாப்பு என்பதை கிராமப்புறப் பொருளாதாரத்துடன் இணைத்து செயல்பாடுகள் உள்ளன. ஆனால் இந்த விஷயத்தில் சில இந்து அமைப்புகள் பசு பாதுகாப்புடன் சேர்த்து செய்யும் பிரச்னைகளால் மத்திய அரசுதான் பழி சுமக்க வேண்டியிருக்கிறது. ஆங்கில பத்திரிகைகளில் இருப்பவர்களும் இன்னும் 2014-ல் நிகழ்ந்த பாஜக வெற்றியை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் இதுபோன்ற சர்ச்சைக்குரிய செய்திகளே வெளிவரும். நானே 40 ஆண்டுகள் ஆங்கிலப்பத்திரிகைகளில் பணிபுரிந்த அனுபவம் உடையவன் என்றாலும்கூட இதைச் சொல்கிறேன்.
தலித்களுக்காக பாஜக ஏராளமாக செய்கிறது. நிறைய எம்பிகள் தலித் சமூகத்தில் இருந்து வந்துள்ளனர். சமீபத்தில் நிகழ்ந்த 19 அமைச்சர்கள் மாறுதலில் ஐந்தாறு பேர் தலித்கள் இடம்பெற்றனர். இதுவும் கூட எதிர் அணியினருக்கு பிடிக்காமல் போகிறது. இந்த பிரச்சனை பெரிது படுத்தப்படுகிறது.
மோடி டெல்லிக்கு வெளியிலிருந்து வந்தவர். இங்கே உள்ளவர்கள் ஒருவிதமான அமைப்புக்குப் பழகியிருந்தனர். மோடி அதை மாற்ற விரும்புகிறார். அரசு அலுவலகங்களில் மதியம் மூன்று மணிக்கு கிளம்பி வெளியே சென்றுவிடுவர். அவர் பயோமெட்ரிக் சிஸ்டத்தைக் கொண்டுவந்து வைத்துவிட்டார். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு துறையிலும் அமைச்சரவை வகுத்த திட்டங்களை மறுபரிசீலனை செய்கிறார். துறைச் செயலரும் அமைச்சரும் திட்டங்களின் நிலைபற்றிச் சொல்லவேண்டும். துறைகளில் செயலர்களாக இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் அவரது வேகத்துக்கு வர மறுக்கிறார்கள். மோடி ஐஏஎஸ் அல்லாத பிற பணிகளிலிருந்து ஆட்களைக் கொண்டுவந்து பணிகளை ஆற்றிக்கொண்டு இருப்பதையும் பார்க்க முடிகிறது.
கருப்புப்பணத்தைக் கொண்டுவருவது என்கிற வாக்குறுதியில் அவர் இப்போது தீவிரமாக உள்ளார். கருப்புப்பணத்தைக் கைப்பற்றிக்கொண்டுவந்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் 15 லட்சரூபாய் தருவதாக சொன்னாரே என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கிறார்கள். அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்று பாஜகவினர் சொல்கிறார்கள். ஆனாலும் இந்த கருப்புப் பண நடவடிக்கை தொழில்துறையில் சக்திவாய்ந்த புள்ளிகளுக்குப் பிடிக்கவில்லை. அவர்களில் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களில் அரசுக்கு எதிரான செய்திகள்தான் முன்னிலை பெறுகின்றன.
என் ஜி ஓக்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வந்துகொண்டிருந்த நிதியையும் குறிவைத்து அவர்களையும் அரசு பகைத்துக்கொண்டது. வேலைவாய்ப்பு அதிகமாகி உள்ளதா? உள் கட்டமைப்பு பெரிதாகி உள்ளதா? கல்வி அமைப்பு வளர்ச்சி பெற்றுள்ளதா? போன்றவற்றைத்தான் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவே இந்த விசயங்களில்தான் மோடி கவனம் செலுத்துகிறார். இவருக்கு இருக்கும் வேகம் பிற அமைச்சர்களிடம் சற்றுக்குறைவுதான். இது ஒரு பின்னடைவுதான்.
பெரிய பத்திரிகைகளுக்கு மத்திய அரசு விளம்பரம் ஏராளமாகப் போகும். இப்போது அதற்கு கட்டுப்பாடுகொண்டுவந்து அந்த பத்திரிகைகளில் தொழிலாளர் நலம் பேணப்படுகிறதா என்ற மதிப்பீட்டை விளம்பரம் அளிப்பதற்கு முன்பாக வைக்கிறார்கள். இதுவும் எதிர்ப்பாக அமைகிறது.
மாற்றம் வேண்டும் என்று எல்லாரும் வாக்கு அளித்தனர். ஆனால் அந்த மாற்றம் தனக்கு வரக்கூடாது என்று நினைக்கிறார்கள். இதுமாதிரி ஒரு வலையில் பிரதமர் சிக்கி இருக்கிறார். பொருட்கள் மற்றும் சேவை வரி சட்டத்தை நிறைவேற்ற அரசு நினைக்கிறது. ஆனால் காங்கிரஸ் நமக்கு போன ஆட்சிக்காலத்தில் இவர்கள் ஒத்துழைக்கவில்லை. நாம் ஏன் ஒத்துழைக்கவேண்டும் என்று நினைக்கிறது. அத்துடன் நமக்கு எதிராக அமலாக்கத்துறையை வேறு ஏவிவிடுகிறார்களே என்று
கருதுகிறது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்றால் அதற்குப் பொருளாதாரக் காரணம் இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு வருவாய் குறையும். ஆனால் பீஹாரில் நிதிஷ்குமார் ஆதரிக்கிறார். ஏனெனில் அங்கு தயாரிப்புத்தொழில் இல்லை. அவர்களுக்கு இதன் மூலம் வருவாய் அதிகமாகும். ஆனால் காங்கிரஸ் எதிர்க்கிறது என்றால் அதற்கு அரசியல்தான் காரணம்.
மாநில முதல்வர்கள் டெல்லிக்கு பிரதமரை சந்திக்க வருகிறார்கள் என்றால் மத்திய அரசு திட்டம் என்ன நிலுவையில் இருக்கிறது சொல்லுங்கள் உடனே முடித்துத் தருகிறோம் என்கிறார்கள். பீஹாரில் நிதீஷ்குமார்தான் வென்றார். மத்திய அரசை பல விஷயங்களுக்காக விமர்சிக்கிறார். ஆனாலும் மாநில நலன்கள் என்று வரும்போது திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் மோடி பாகுபாடு காண்பிக்கிறார் என்று சொல்வது கிடையாது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியும் அப்படியே. சமீபத்தில் கேரளமுதல்வர் பினராயி விஜயன் வந்து மோடியைச் சந்தித்தார். மிகச் சிறப்பான சந்திப்பாக இருந்தது என்று வெளியே வந்து சொன்னார். கேரளாவுக்கு வளர்ச்சி தேவை. கட்சி பாகுபாடு தாண்டி மத்திய அரசின் திட்டங்களை பெற்றுச் செய்யுங்கள் என்று மோடி அவரிடம் கூறினார். ஒரு விதத்தில் அரசியல் சொல்லாடல்களை அவர் மாற்ற முயற்சி செய்கிறார். இன்னொருபுறம் அவர் மௌனமாக இருப்பதால் கெட்டப்பெயர் ஏற்படுகிறது. அவர் பேசாமல் இருப்பது பல ஊகங்களுக்கு வழி வகுத்துவிடுகிறது. சமீபத்திய தலித் பிரச்னையில் இப்படிச் செய்யக்கூடாது என்று வெளிப்படையாகச் சொல்லவேண்டியதுதானே?
பேசாமல் இருப்பது மேலும் தவறான விளைவுகளையே ஏற்படுத்துகிறது.
பிரதமருக்கு அரசியல் விவகாரங்களில் இன்னும் கொஞ்சம் பக்குவம் தேவைப்படுகிறது. ஆனால் ‘நான் மீண்டும் ஐந்தாண்டுகள் கழித்து ஜெயித்துவரவேண்டும் என்று இங்கு வரவில்லை. இந்த ஐந்தாண்டுகளில் இந்த அமைப்பை மாற்றவேண்டும் என்று நினைக்கிறேன். மாற்றம் இருக்கிறதா என்று மக்கள் சொல்வார்கள். இல்லையென்றால் திரும்பவும் குஜராத்துக்கே போய்விடுவேன்’ என்று அவர் சொல்கிறார்.
இந்த இரண்டு ஆண்டுகளில் தான் செய்த சில தவறுகளையும் அவர் புரிந்துகொண்டிருக்கிறார். சமீபத்திய அமைச்சரவை மாற்றங்களிலும் அதைப் பார்க்கலாம். ஆர்.எஸ்.எஸ்சிலும் கூட தாங்கள் நினைத்த வற்றில் பலவற்றை செய்யவிடுவதில்லை என்று கசப்பு இருப்பதையும் பார்க்கிறேன்.
(சேகர் அய்யர், பொலிடிக்கல் எடிட்டர், டெக்கான் ஹெரால்டு,புதுடெல்லி. இவர் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் முன்னாள் அசோசியேட் எடிட்டர். நமது செய்தியாளரிடம் பேசியதிலிருந்து)
ஆகஸ்ட், 2016.